search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு எக்ஸ்பிரஸ்"

    • பணத்தை தவறவிட்டவர் குளச்சல் பகுதியை சேர்ந்த சந்திர போஸ்கோ என்பது தெரியவந்தது.
    • சந்திர போஸ்கோ கேரள மாநிலம் கொல்லத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    நாகர்கோவில்:

    பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது. அப்போது முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கிழிந்த நிலையில் துணிப்பை ஒன்று கிடந்தது.

    அதே ரெயிலில் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த போலீஸ்காரர் ஷாஜகான் அந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அப்போது பைக்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த பணப்பையை அவர் நாகர்கோவிலில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் ஒப்படைத்தார்.

    ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில் பணத்தை தவறவிட்டவர் குளச்சல் பகுதியை சேர்ந்த சந்திர போஸ்கோ என்பது தெரியவந்தது. இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    நேற்று கொல்லத்திலிருந்து சந்திர போஸ்கோ வீட்டிற்கு வருவதற்காக பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளார். ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்திற்கு வந்ததும் அவர் ரெயில் பெட்டியை விட்டு இறங்கி சென்றுவிட்டார். வீட்டுக்கு சென்ற பிறகு பார்த்த போது தான் தன் கையில் இருந்த ரூ.4 லட்சம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    உடனே அவர் பணத்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நிலையில் நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் வந்து விசாரித்தபோது அவரது பணம் போலீசில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணைக்கு பிறகு அந்த பணத்தை ஒப்படைத்தனர். அனாதையாக கிடந்த பணத்தை எடுத்து ஒப்படைத்த போலீஸ்காரர் ஷாஜகானுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    ×